பொதுவாகவே அனைவருக்கும் என்றாவது ஒரு நாள் கோடீஸ்வரனாகி விட மாட்டோமா, வேறு நல்ல வேலை கிடைத்து வாழ்க்கை தலைகீழாக மாறிவிடதா என்று கண்டிப்பாக நினைத்திருப்போம். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு நபர் பல ஆண்டுகளாக தங்கம் என நினைத்து, தான் கண்டெடுத்த கல்லை பல கோடிகளுக்கு விற்றுள்ளார். உண்மையில் அது தங்கத்தை விட பல மடங்கு மதிப்புள்ள கல் என்பதுதான் ட்விஸ்ட்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டேவிட் ஹோல் என்ற நபர் விசித்திரமான கற்களை சேகரித்து வைப்பது வழக்கம். 2015 ஆம் ஆண்டு, ஒரு நாள் மேரிபரோ பிராந்திய பூங்காவில் உள்ள தங்க சுரங்க பகுதியில் தனது உலோகத்தை கண்டுபிடிக்கும் கருவியை வைத்துக்கொண்டு ஆங்காங்கே சோதனை செய்து கொண்டிருந்தார். பலரும் இவ்விடத்திற்கு வந்து தங்கத்தை கண்டுபிடிப்பது வழக்கம். அவ்வப்போது சிறிய சிறிய தங்க கற்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், டேவிட் ஒரு இடத்தில் வித்தியாசமான சிறு பாறை போன்று இருக்கும் கல் ஒன்றினை கண்டுபிடித்தார். அந்த சிறு பாறைக்குள் தங்க கட்டி இருப்பதாக நினைத்து அதை உடைக்க முயற்சித்தார். எந்த கருவியை வைத்து உடைத்தாலும், ஆசிட்டையே ஊற்றினாலும் கூட அந்தக் கல் உருமாறவே இல்லை. இது வேலைக்கு ஆகாது என்று நினைத்து அதனை அலமாரியில் அலட்சியமாக வைத்து விட்டார்.
17 ஆண்டுகளுக்குப் பிறகு, "இந்த தங்க கல்லை இப்படியே வைத்திருந்தால் ஒரு பயனும் இல்லை, இதை விற்றாலாவது நாலு காசு பார்க்கலாம்" என நினைத்து மெல்போனில் இருக்கும் அருங்காட்சியகத்திற்கு எடுத்துச் சென்றார். அதன் பிறகு தான் இந்த கல்லின் உண்மையான தன்மை தெரியவந்தது.
டேவிட் கொண்டு சென்ற கல்லை சோதனை செய்த பிறகு ஒரு அதிர்ச்சியான விஷயத்தை அருங்காட்சியகத்தின் வல்லுநர்கள் கூறினர். டேவிட் வைத்திருந்தது சாதாரண தங்கக் கல் அல்ல. 17 கிலோ எடையுள்ள, சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையான விண்கல். அடேங்கப்பா என்று வாயை பிளந்தார் டேவிட். இந்த விண்கல் சூரிய மண்டலம் உருவாகிய காலகட்டங்களை சேர்ந்து இருக்கலாம் என்று யூகித்தனர்.
இதுகுறித்து அருங்காட்சியகத்தின் வல்லுநர் ஹென்றி கூறியதாவது,"எனது 37 வருட வேலை அனுபவத்தில் ஆயிரக்கணக்கான விண்கல்லை போன்று உள்ள கற்களை ஆய்வு செய்திருக்கிறேன். இதுவரை டேவிட் கொண்டு வந்த விண்கல்லோடு சேர்த்து வெறும் இரண்டு உண்மையான விண் கற்களை மட்டுமே கண்டுள்ளேன். அதிலும் டேவிட்டின் கல் மிகப் பழமையானது".
டேவிட்டின் பழமையான விண்கல் சாதாரண வெட்டும் கருவிகள் மூலம் வெட்ட முடியாது என்பதனால், ஹென்றி சூப்பர்-ஹார்ட் வைர சாவை பயன்படுத்தி அந்த கல்லை வெட்டியுள்ளார். உள்ளே முழுக்க முழுக்க கார்பன், இரும்பு மற்றும் நிக்கல் நிரம்பி காணப்பட்டது.
விண்கல் 4.6 பில்லியன் ஆண்டுகள் பழமையானதாக இருந்தாலும் பூமியில் 200 ஆண்டுகளுக்கு முன்பு விழுந்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்தனர். இந்த விண் கல்லை ஏலம் விட்டால் பல கோடிகளைத் தாண்டும் எனவும் கூறியுள்ளனர். உண்மையாகவே டேவிட்டிற்கு அடித்தது ஜாக்பாட்.