பொதுவாக சாலைகள் என்றாலே வளைவு நெளிவுகளோடு இருக்கும். பல ஆண்டுகளாக போக்குவரத்தை எளிதாக்குவதற்காக சாலைகள் கட்டப்பட்டுள்ளன. அவை, குறுகிய உள்ளூர் தெருக்கள் முதல் நாடுகள் மற்றும் கண்டங்களில் பரவியுள்ள முக்கிய நெடுஞ்சாலைகள் வரை பல்வேறு வடிவங்களில் வருகின்றன. ஆனால், அமெரிக்காவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை பல்லாயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு, ஒரு வளைவு நெளிவு கூட இல்லாமல் செல்கிறது.
இந்த சாலையில் பயணம் செய்யும் போது பல்வேறு வானிலை மற்றும் சுற்றுச்சூழலை நாம் அணுபவிக்க முடியும் என்பதாலோ என்னவோ இந்த நெடுஞ்சாலை வழியாக வாகனத்தை ஓட்டுவதே பல சாலைப் பயணிகளின் கனவு என்றே சொல்லலாம்.
இந்தியாவில் மிக நீளமான சாலை என்றால் நேஷனல் ஹைவே (NH44) தான் முதன்மை. 4,112 கிலோமீட்டர் தூரமுள்ள இந்த சாலை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடங்கி தெற்கில் கன்னியாகுமரி வரை சென்று முடிவடைகிறது. ஆனால் உலகின் மிக நீளமான சாலையைப் பற்றி பேசும்போது அமெரிக்காவின் பான்- அமெரிக்கன் ஹைவே தான் முதலிடம்.
இந்த பான்-அமெரிக்க நெடுஞ்சாலை மெக்சிகோ, எல் சால்வடார், குவாத்தமாலா, நிகரகுவா, கோஸ்டாரிகா மற்றும் பனாமா போன்ற வட அமெரிக்காவின் நாடுகளின் வழியாக செல்லும் ஒரு தொடர்ச்சியான பாதை ஆகும். இது தென் அமெரிக்கா நாடுகளான கொலம்பியா, பெரு, ஈக்வடார், சிலி மற்றும் அர்ஜென்டினா வழியாகவும் செல்கிறது. இந்த பான்- அமெரிக்க நெடுஞ்சாலை பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக இருக்கிறது. இது மிக நீளமான மோட்டார் சாலையாக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்காவின் சின்னமான பான்- அமெரிக்கன் நெடுஞ்சாலையின் மொத்த தூரம் 30,000 கிலோ மீட்டர்கள். இது ரஷ்யாவின் டிரான்ஸ்-சைபீரியன் நெடுஞ்சாலை வரை ஒரு தனித்துவமான பயணத்தை வழங்குகிறது. அதாவது நீங்கள் பாடலை ரசிப்பவர்களாக இருந்தால் எந்தவித இடையூறுகளும் இன்றி பாடலை ரசித்துக் கொண்டே ஹாயாக உங்கள் பயணத்தை அனுபவிக்கலாம். ஏனென்றால், நகரங்களில் இருக்கும் டிராபிக் போன்ற போக்குவரத்து இடையூறுகள் எதுவும் இன்றி, ஆள் அரவமற்ற நெடுஞ்சாலையில் நமக்கு பிடித்த பாடலை கேட்டபடி பயணம் செய்வது ஒரு தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும்.
இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்று தெரியுமா? சாலையின் தூரம் மிக நீளமாக இருப்பதால் ஒரு நாளைக்கு 500 கிலோ மீட்டர் வேகத்தில் நீங்கள் சென்றாலும் கூட, ஒரு பயணத்தை முடிக்க இரண்டு மாதங்களுக்கும் மேல் ஆகும். ஒருவருடைய வாகனத்தின் வேகத்தின் அடிப்படையில் இந்தக் கால அளவு மாறுபடவும் வாய்ப்புள்ளது. உதாரணமாக, கார்லோஸ் சான்டாமரியா என்ற நபர் இந்த நெடுஞ்சாலை பயணத்தை முடிக்க 117 நாட்கள் எடுத்துக்கொண்டாராம். ஆச்சரியம் என்னவென்றால், 14 நாடுகள் வழியாகச் செல்லும் இந்த சாலையில் ஒரு யூ-டர்ன் கூட எடுக்கத் தேவையில்லை. ஆக மொத்தத்தில் பயண பிரியர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். நகரங்களில் இருக்கும் தேவையில்லாத டிராபிக், காற்று மாசு, அதீத சத்தம், இதனால் ஏற்படும் மன அழுத்தம் போன்ற எதுவும் இங்கு இல்லை.
பான்-அமெரிக்க நெடுஞ்சாலையின் கட்டுமானம் 1920களின் முற்பகுதியில் தொடங்கியது. இதன் நோக்கமே அமெரிக்காவின் சுற்றுலாவை மேம்படுத்துவது. 1937 ஆம் ஆண்டு இந்த சாலையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தொடர்பாக 14 நாடுகளும் பரஸ்பர உடன்பாட்டை எட்டின. இறுதியாக 1960 இல் பொது போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இந்த நெடுஞ்சாலையில் பயணிப்பதில் உள்ள அழகு என்னவென்றால் நீங்கள் ஒவ்வொரு வகையான இயற்கை காட்சிகளையும் ரசிக்க முடியும். சில சமயங்களில் உயரமான மலைகளையும், சில சமயங்களில் பாலைவனங்களையும், சில சமயங்களில் கடற்கரைகளையும், அடர்ந்த காடுகளையும் காண முடியும். அடடா! நினைத்துப் பார்க்கவே எப்படிப்பட்ட ஒரு ரம்மியமான பயணமாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். இந்த நெடுஞ்சாலை வழியாக ஓட்டுவது பல சாலைப் பயணிகளின் கனவு.
இந்த நெடுஞ்சாலையை பராமரிப்பது அமெரிக்காவின் பொறுப்பு மட்டுமல்ல. இதில் இணைந்திருக்கும் 14 நாடுகளும் அதன் பராமரிப்பில் பங்கேற்கின்றன. அதனால், இது வெறும் சாலை மட்டுமல்ல. பல்வேறு நாடுகளின் பாரம்பரியத்தையும் வாழ்க்கை முறையையும் இணைக்கும் ஒரு வரலாற்று, கலாச்சார பயணமாகவே கருதப்படுகிறது.