ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணம் செய்து வைப்பார்கள் என்று அக்காலத்து பெரியோர்கள் கூறுவது வழக்கம். திருமணம் என்றாலே சடங்கு சம்பிரதாயம் என்று ஒவ்வொரு சமுதாயத்தினருக்கும் பல்வேறு வகையான பாரம்பரிய முறைகள் உண்டு. அதனை பழங்காலங்களில் இருந்தே மக்கள் பின்பற்றி வருகின்றனர். அதிலும் இந்தியாவில் நடக்கும் திருமணங்களை பற்றி சொல்லித் தெரிய வேண்டியது இல்லை. பல உலக நாடுகளும் பார்த்து வியக்கும் அளவிற்கு ஆடம்பரமும் எக்கச்சக்க சடங்கு சம்பிரதாயங்களையும் நாம் பின்பற்றுகிறோம். அவற்றில் சில பார்ப்பதற்கு வினோதமாக தோன்றும்.
பொதுவாக திருமணம் என்றால் இரு மனங்கள் இணைந்து ஒன்று சேரும் ஒரு நிகழ்வு என்போம். ஆனால் சீனாவில் ஒரு வினோத திருமண முறையை மக்கள் பின்பற்றி வருகின்றனர். உலகிலேயே இது போன்ற ஒரு வினோத திருமண முறையை யாரும் கேள்விப்பட்டிருக்க வாய்ப்பு இல்லை. அதுதான் இறந்து போனவர்களை தேடிச் சென்று அவர்களை திருமணம் செய்து கொள்ளும் பாரம்பரிய முறை. கேட்பதற்கே திகிலாகவும், அதே சமயத்தில் ஆச்சரியப்பட வைக்கிறது அல்லவா! சீனாவில் இந்த வினோத நடைமுறையை 'பேய் திருமணம்' (கோஸ்ட் மேரேஜ்) என்று அழைக்கின்றனர்.
பேய் திருமணம்
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இறந்தவர்களை திருமணம் செய்யும் இந்த வழக்கம் சீனாவில் சில பகுதிகளில் உள்ளது. ஒரு நபர் நிறைவேறாத ஆசைகளோடு இறந்து விட்டால், அது உயிருடன் இருப்பவர்களையும் சேர்த்து பாதிக்கும் என்று நம்புகின்றனர். அதனாலேயே இது போன்ற வினோத நடைமுறையை அக்கிராம மக்கள் தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இக்காலகட்டத்திலும் பின்பற்றுகிறார்கள் என்றால் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது.
இறந்த சடலங்களை ஏன் திருமணம் செய்கிறார்கள் தெரியுமா? திருமணம் ஆகாமல் இறந்து போனவர்கள் தங்கள் மறுவாழ்வில் தனிமையை தவிர்க்க இது உதவும் என்று இந்த வழக்கத்தை பின்பற்றி வருகிறார்கள். அதிலும் உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்களை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த பேய் திருமணத்திற்கும் கூட திருமண பொருத்தம் பார்க்கிறார்கள் தெரியுமா! அதுவும் உயிருடன் இருப்பவர்களுக்கு எப்படி திருமணப் பொருத்தம் பார்க்கிறார்களோ, அதைப்போலவே சீனாவில் இறந்த மகன் அல்லது மகளின் குடும்பத்தினரும் பொருத்தமான திருமண பொருத்தத்தை கண்டுபிடிக்க 'ஃபெங் சுய்'/ மாஸ்டரை வேலைக்கு அமர்த்தியிருக்கின்றனர்.
பேய் திருமணத்தின் வகை
இந்த பேய் திருமணத்தில் இரண்டு வகை உண்டு. நிச்சயதார்த்தம் ஆன பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் இறந்தவர்களுக்கு முறைப்படி திருமணம் செய்து வைத்து அடக்கம் செய்வது ஒரு வகை. இன்னொரு வகை இறந்த பின் திருமண பொருத்தம் பார்க்கப்பட்டு பிறகு அந்த சடலங்களை ஒன்றாக அடக்கம் செய்வது. பொருத்தம் எப்படி பார்க்கப்படுகிறது தெரியுமா? இறந்தவர் என்ன வேலைக்கு சென்றார், குடும்ப பின்னணி என்ன,வயது மற்றும் புகைப்படங்களோடு பொருத்தம் பார்க்கப்படுகிறது.
பிறகு, இறந்தவர்கள் கல்லறையில் இருந்து மீட்கப்பட்டு, மணமகன் அல்லது மணமகள் போல் அலங்கரிக்கப்பட்டு, வழக்கமான சடங்கு முறைகளை பின்பற்றி உயிருள்ள நபரோடு திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இந்த வினோத நடைமுறை பெரும்பாலும் சீனாவின் கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகிறது. திருமணமான ஒரு ஆணின் கல்லறைக்கு பக்கத்தில் திருமணமான ஒரு பெண்ணின் கல்லரை கட்டப்பட்டால், அவர்கள் தனது அடுத்த பிறவியில் பிரம்மச்சாரியாக இருக்க மாட்டார்கள் என்று கிராமப்புற உள்ளூர் வாசிகள் நம்புகின்றனர்.
சாதாரண திருமணங்கள் போலவே இந்த பேய் திருமணங்களும் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்படுகின்றன. இதற்காக மணமகள் மற்றும் மணமகன் குடும்பங்கள் அதிக அளவில் பணத்தை செலவிடுகிறார்கள்.
திருடப்படும் சடலங்கள்
இளம் பெண்களின் இறந்த உடல்களும், சாம்பலும் பேய் திருமணங்களில் வாங்கப்பட்டு விற்கப்படும் பொருட்களாக மாறிவிட்டன. 2016 ஆம் ஆண்டில், வட-மத்திய சீனாவில் உள்ள கான்சு மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களைக் கொன்று, பேய் திருமணங்களுக்காக அவர்களின் உடல்களை விற்றார். அவருக்கு 2021 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டில், கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் உள்ள ஃபாங் யாங்யாங் என்ற பெண் அவரது மாமியாரால் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட பின்னர், அப்பெண்ணின் அஸ்தி சடங்கு நடைபெறும் விழாவில் பயன்படுத்தப்பட்டது.
பின்னர், 2021 ஆம் ஆண்டில், ஷாண்டோங்கில் உள்ள இறுதிச் சடங்கு இல்ல ஊழியர்கள், இணையத்தில் பிரபலமான ஒரு பெண்ணின் சாம்பலைத் திருடி, பேய் திருமணத்திற்காக உள்ளூர் குடும்பத்திற்கு விற்றனர். இதுபோன்ற சம்பவங்களை கட்டுப்படுத்த சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஒரு சடலத்தைத் திருடி பாலியல் பலாத்காரம் செய்யவோ அல்லது அழிக்க நினைக்கும் எவருக்கும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சீன அரசு கட்டளையிட்டுள்ளது.
இந்த பழங்கால திருமண வழக்கம் சீன அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டிருந்தாலும் சில பகுதிகளில் இன்னும் இந்த பேய் திருமணங்கள் நிகழ்கின்றன. ஆக மொத்தத்தில், சீனாவில் நடைபெறும் பேய் திருமணங்கள் ஒரு மூட நம்பிக்கை நடைமுறை என சொல்வதில் எந்த தயக்கமும் வேண்டியது இல்லை.